பெண்மையே போற்றும்…
நம்மை காக்கும் நவராத்திரி!!
சிறுமி, இளம்பெண், திருமணமான மங்கை, வயது முதிர்ந்த பெண் என பெண்மையின் அனைத்து வடிவங்களையும் பூஜிக்கிறது சாக்தம்.
'சக்தி' என்ற சொல்லை உச்சரிக்கும் போதே, நாடி நரம்புகளெல்லாம் பரவும் சிலிர்ப்பு, அந்தச் சொல்லுக்குரிய மகிமையைப் புலப்படுத்தும். ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இந்த உலகைக் காக்கும் அன்னையைத் தொழுது போற்றும் ஒன்பது நாட்களே 'நவராத்திரி'.
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
(மஹாகவி பாரதியார்).
பெண்மை போற்றுதலுக்குரியது. துதிக்கத் தகுந்தது. 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று வள்ளுவப்பெருமான் போற்றிப் புகழ்கிறார். உலகில் உயிர்களின் தோற்றம் நிகழ்வது பெண்மையாலேயே.
இவ்வுலகமனைத்தும் ஒரு ஒழுங்கில் இயங்குகிறது. ஒவ்வொரு இயக்கமும், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்குவதற்குக் காரணமான ஆற்றலின் பிரவாகத்தை, சக்தியின் சொரூபத்தை பெண்வடிவில் தொழுது போற்றும் மார்க்கமே சாக்தம் ஆகும்.
நாம் வாழும் பூமி, அதில் ஓடும் நதிகள், பேசும் மொழி, உண்ணும் உணவு என எதையும் பெண்ணின் அம்சமாக, பூமாதா, திரெளபதி அம்மன், கங்கையம்மன், காவிரித்தாய், அன்னைத் தமிழ், அன்னபூரணி, அன்னலட்சுமி என்று சிறப்பித்துக் கூறுவது நமது மரபு..
நமது மரபில் 'அன்னை' என்ற உறவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிக உன்னதமானது. 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்' நாம் மிக உயர்வாக வைத்து மதிக்க வேண்டியவை.
உயிர்களின் தோற்றத்திற்குக் காரணம் அன்னை. 'கெட்டமகன் இருக்கலாம் ஆனால் ஒரு போதும் கெட்ட தாய் இல்லை' என்பது நிதர்சன உண்மை. குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் மன்னிக்கும் தகைமை தாய் ஒருத்திக்கே உண்டு. உலகிற்கு நம்மைத் தருவதிலிருந்து, உணவூட்டிப் பாதுகாத்து, நரைகூடி கிழப்பருவம் எய்தினாலும் தன் மக்கள் நலமே பெரிதென நினைத்துத் தியாகத்தின் மொத்த உருவமாய் வாழும் தாய்மார்களைப் பெரிதெனப் போற்றும் பாரம்பரியம் நம்முடையது.
தாய்மையின் மிக உன்னத, உயரிய வடிவாக, கருணைமழை பொழியும் கற்பக விருட்சமாக, உலகனைத்தும் தோன்றக் காரணமான பரம்பொருளாக, ஜகன்மாதாவாக, உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி நின்று உலகை இயங்கச் செய்யும் ஆற்றலின் பெருவடிவாக, அம்பிகையை போற்றி வழிபடுகிறார்கள் சாக்தர்கள்.
'சக்தியில்லையேல் சிவமில்லை' என்பது சாக்தர்களின் துணிபு. சலனமற்றிருக்கும் நிர்க்குண நிராகாரப் பரம்பொருள் சக்தி எனும் ஆற்றலின் முழுவடிவமாய் இவ்வுலகனைத்தையும் தோற்றுவித்து, காத்து, பின் முடிவில் உலகனைத்தும் ஒடுங்கும் இடமாய்த் திகழ்கிறது.
பிரபஞ்சமுழுவதும் உள்ளும் புறமும் ஊடாடி நின்று உலகனைத்தையும் நன்றாய் இயங்கச் செய்து காத்து ரட்சிக்கும் சக்தியின்வழிபாடு,
சைவத்தில் சக்தி சிவனாரின் பத்தினி. திருமாலின் தங்கை. விநாயகர், முருகப்பெருமானின் தாய். ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி, 'தாயார்' என்றே போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளும் சக்தி சொரூபமான தேவியரின் துணை கொண்டே, முத்தொழில்களைப் புரிகிறார்கள்.
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; . (அபிராமி அந்தாதி)
என்று அபிராமி பட்டர், மும்மூர்த்திகளையும் படைத்த பரம்பொருளான ஆதிசக்தியின் வெவ்வேறு வடிவங்களே, முப்பெருந்தேவியர் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.
அம்பிகையின் கருணை அளப்பரியது. அடியவர்களை அதிகம் சோதிக்காது, வேண்டுவனவற்றை அப்பொழுதே தரும் தன்மையுடையது.
"கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே."
என எங்கும் நிறைப் பரம்பொருளாக அம்பிகையைப் போற்றித்துதிக்கிறார்
அபிராமி பட்டர்.
உலகில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகும் போது மஹாகாளியாக அசுரர்களை சம்ஹரித்து அருளுகிறாள். மஹாமாயையாக, உலகனைத்தையும் வசப்படுத்தி, ஆள்கிறாள். அஞ்ஞான இருளில் மூழ்கி ஜீவர்கள் தவிக்கும் போது, தன் வற்றாத பெருங்கருணையால் முக்தியை அருள்கிறாள்
சக்தி வழிபாட்டின் வேர் மிகப் பழமையானது. தாய் வழிபாடும் கன்னி வழிபாடும் மெல்ல மெல்ல ஒருங்கிணைந்தே சாக்தமாகத் தோற்றம் கொண்டது என்றொரு கூற்று உண்டு.ஆதிகாலத்தில், உயிர்களைத் தோற்றுவிக்கும் அதிசய சக்தியாகப் பெண்மையை மதித்த மனிதன், தன் கூட்டங்களுக்குப் பெண்ணின் தலைமையை ஏற்று நடந்தான். காலமாற்றத்தால், இந்நிலை மாறியபோது கூட, பெண்மையின் மகிமையை உணர்ந்து போற்றும் மார்க்கம் மனிதனால் சாக்தமாகப் பேணப்பட்டே வந்திருக்கிறது.
'சக்தி' என்ற சொல்லை உச்சரிக்கும் போதே, நாடி நரம்புகளெல்லாம் பரவும் சிலிர்ப்பு, அந்தச் சொல்லுக்குரிய மகிமையைப் புலப்படுத்தும். ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இந்த உலகைக் காக்கும் அன்னையைத் தொழுது போற்றும் ஒன்பது நாட்களே 'நவராத்திரி'.
சிறுமி, இளம்பெண், திருமணமான மங்கை, வயது முதிர்ந்த பெண் என பெண்மையின் அனைத்து வடிவங்களையும் பூஜிக்கிறது சாக்தம். பாலா, கன்யாபூஜை, சுமங்கலிபூஜை, ஸூவாஸினி பூஜை என அனைத்தும் சாக்தத்தில் முக்கிய இடம் பெறுகிறது. முக்கியமாக, அம்பிகைக்கு உகந்த தினங்களான 'நவராத்திரியில்' இப்பூஜைகள் செய்வது இகபர சுகங்களை அளிக்க வல்லது.
கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியையும் செல்வத்தின் தலைவியாக, ஸ்ரீ லக்ஷ்மியையும் வீரத்தின் அதிதேவதையாக பார்வதியையும் போற்றும் சாக்தத்தில் நவராத்திரிப் பண்டிகை, அமைதியும் காருண்யமும் பொருந்திய அம்பிகை, அநீதி மேலோங்கும் போது துர்க்கையாக, மஹாசண்டியாக, மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்து மகிஷாசுரனை வென்றதைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.
ஆயினும், புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே, நாடெங்கும் திருவிழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் புனிதமான பாரத நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதத்தில் அன்னை மிகச் சிறப்பாக ஆராதிக்கப்படுகிறாள்.
தற்போது சில மந்திரவாதிகளால் ஊழ்வினை சாபத்தை தீர்க்க, இவைகளினால் ஏற்பட்ட செய்வினைகளை அகற்ற அழிக்க பெண் தெய்வங்களை பயன்படுத்தி செய்வதாக சித்தரிக்கின்றனர்,
ஏவல் செய்யும் தெய்வமா? அன்னை!!
வரமளிப்பவள் எத்தகைய சூழ்நிலையிலும் நம்மோடு இருந்து காப்பவள், ஊழ்வினை சாபத்திலிருந்து பாதுகாப்பாக நம்மை கழிக்க வைத்து நம் கர்மத்தை அழித்து காப்பாற்றி வாழ்வளிப்பவள் அன்னை”
உலகை காக்கும் அம்பிகையே, தாயே உன் பாதம் பணிகிறோம்….
அவள் கருவறையில் அவன் ஏற்றிய ஒளிவிளக்கை காக்க பெருந்துன்பத்தை பேரின்பமாய் ஏற்றாள்.
அவளை ஆராதிக்க வேண்டாம்…
அர்ச்சிக்கவும் வேண்டாம்…
அன்பென்ற காணிக்கை, அதுபோதும் அவளுக்கு…
பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயுரா ஆயுர்வேதாஸ்ரம்
பாரம்பரிய தமிழ் மருத்துவ ஆலோசகர்
பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram
(Siddha & Ayurvedha)
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336
Mayura Ayurvedasram
(Holistic Healing Solutions)
#19, 10th East Main Road,
Opp EB Office, Katpadi – 632 006
Call : 90421 35330