உடலே... உயிரே...நலமா...
உடல் ஓர் அதிசயம்.
சமையல் சரியில்லைன்னா ஒரு நாள் துன்பம், அறுவடை சரியில்லைன்னா நான்கு மாத துன்பம், படிப்பு சரியில்லைன்னா ஒரு வருட துன்பம். ஆனால் உடம்பு சரியில்லைன்னா ஆயுள் முழுவதும் துன்பம். ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்த இனிய வாழ்க்கையில், உடல் என்பது ஒரு அதிசயம்.
''காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா'' என்று சித்தர்கள், அன்றைக்கு உடம்பைப்பற்றி சொல்லி வைத்தார்கள். பின்னால் வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை, ''காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா, நோயில்லாமல் காத்து நுாறாண்டுகள் உய்யடா'' என உடம்பின் மேன்மையை, அக்கறையோடு விளக்கினார்.திருமூலரும் தனது திருமந்திரத்திலேயே,
''உடம்பினை முன்னும் இருக்கென்று இருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!''
என உடம்பின் முக்கியத்துவத்தை பாடல் மூலம் விளக்குகிறார்.
உடலும் ஆரோக்கியமும்
அன்றாடம் நாம் உண்ணும் மென்மையான, கடினமான உணவுகளை சில மணி நேரத்தில் செரிக்கச் செய்து கழிவாக்குகிறதே, இதுவல்லவா ஆச்சரியத்திலும், ஆச்சரியம். இதை நாம் பாதுகாக்க வேண்டாமா?
விவேக சிந்தாமணி சொல்கிறது...''அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோகரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம்இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்?,''
உடல் சுவாசம், உயிர் சுவாசம் என உடம்பில் ரத்த ஓட்டம் சீராக இயங்க வைப்பது நரம்பு மண்டலமே. எனவே நாடி நரம்புகளை பாதுகாக்க வேண்டும்.
உடல் நலம் ஓர் உன்னதம் இயற்கை மருத்துவம் சொல்கிறது, உலகில் ஐந்து சிறந்த மருத்துவர்கள் யாரென்றால் சூரிய வெளிச்சம், உடற்பயிற்சி, அளவான மற்றும் சத்தான உணவு, ஓய்வு, தன்னம்பிக்கை என்கிறது.
பாரதி சொன்னது போல சூரிய ஒளியை கண்டவுடன் சுடர் முகம் துாக்கி சிரிக்கும், வண்ண மலர்களை போல, மனித முகங்கள் மகிழ்ச்சியில் அன்றாடம்
விழி மலர்ந்தால், உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கும். உடலில் பொலிவும், வலியும் பொங்கி வழிய வாழ்க்கை வசந்த சோலையாக இருக்கும்...
நல்ல உடல் நலம் தானாக கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல. அதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ''நல்ல உடல் நலமே ஒரு பயணம்" நலமான உடலில் தான் நல்ல மணம் இருக்கும்.
எனவே பேணிக் காப்போம் உடல் நலத்தை, மறப்போம் கவலையை, வாழ்வோம் சிறப்போடு..!
அடுத்த பதிவில் உடலை பற்றியும் உயிரை பற்றியும் வேறொரு தகவலை பார்ப்போம்.
