எலும்புகள் இணையும் கைமூட்டு, கால் மூட்டு, தோள் பட்டை மூட்டு, கை மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால்பாத மூட்டு இவை ஆறும் முக்கியமான மூட்டுகள். தற்போது கழுத்து, இடுப்பு, முதுகுத் தண்டு வடத்திலும் தீவிரமான வலியை அனுபவிக்கிறோம்.. நடக்கவும் படிகளில் ஏறவும் அச்சப்பட்டு ஒரேஇடத்தில் முடங்குபவர்களைப் பார்க்கிறோம்.
மூட்டுவலி அறிகுறிகள் :
மூட்டுகளில் ஏற்படும் அசெளகரியமான உணர்வு, அதிக வீக்கம், வலி, எப்போதும் ஒரு உஷ்ணம், நடக்கும்போதோ படிகளில் ஏறும்போதோ எலும்பில் இருந்து ஒருவித சத்தங்களைக் கேட்பது அல்லது உணர்வது, கைகால்களை நீட்டி மடக்கி உட்காரும்போது ஜிவ்வென்று ஏற்படும் வலி, சம்மணமிட்டு அமருவதில் சிரமம், நடப்பதில் சிரமம், நீண்ட நேரம் நிற்கும் போது ஏற்படும் கால்வலி, மூட்டுகளில் இறுக்கம், கால்களை அசைக்க முடியாமை, வளைந்த கால்கள் இவையெல்லாம் மூட்டுவலிகளின் அடுத்தடுத்த கட்டம்!
அதேநேரம் மூட்டுவலிக்கான சிகிச்சை என்பது வலியை முற்றிலும் நீக்காமல் வலியின் தீவிரத்தைக் குறைக்க மட்டுமே செய்யும் என்பதால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்யாட்டால் தீவிரமான வலியை உண்டாக்கி ஒரே இடத்தில் முடக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
மூட்டுவலி ஏன் உண்டாகிறது?
உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் போதிய அளவில் இல்லாமல் இருக்கும்போது எலும்புகள் வலுவிழக்கின்றன. தற்போது குழந்தைகளையும் விட்டுவைக்காத எலும்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு காரணம் அம்மாக்கள் தான். கர்ப்பகாலத்தில் கால்சியச் சத்துகொண்ட உணவுகள் குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும். இப்படியான சத்து குறைபாடு ஆகும் போது குழந்தைகளின் எலும்பு மென்மையாக இருக்கிறது.. உடலை தூண் போல் தாங்கும் ஆதாரமே எலும்புதான் என்பதால் வலுவிழந்த எலும்பைக் கொண்டு பிறக்கும் குழந்தைகள் வருங்காலத்தில் எலும்பு சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகும்போது மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்ஹார்மோன் குறைபாடுகள், கட்டுப்பாடில்லாமல் இருக்கும் நீரிழிவு நோய், மரபு, உடல் உழைப்பின்மை இவையெல்லாம் மூட்டுவலி ஏற்பட காரணங்களாகின்றன.
மருத்துவ ரீதியாக மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ், கெள்ட் ஆர்த்ரைட்டீஸ் சொல்லலாம். 75% மூட்டுவலிக்கு காரணம் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ்தான். மூட்டுகளில் உள்ள கொலாஜன் எனும் புரதத்தின் அளவு, வயதாகும் போது இயற்கையாகவே குறையும் என்பதால்தான் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்டார்கள். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நம் மூட்டுகளையும் பதம் பார்ப்பதால் இந்த ருமட்டாய்டு பாதிப்பு உண்டாகிறது. காலையில் குறைந்தது ஒரு மணி நேரமாவது கை, கால்களை அசைக்கமுடியாது.. இது பரம்பரை நோயாகவும் சொல்லப்படுகிறது. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது கெளட் ஆர்த்ரைட்டீஸ் உண்டாகும். எலும்பில் நோய்த்தொற்று இருந்தாலும் மூட்டுவலி உண்டாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மூட்டுவலியைக் குறைக்க என்ன செய்யலாம் :
மூட்டுவலி லேசாக மினுக்கிடத் தொடங்கும்போதே உணர்ந்துகொண்டால் ஆரம்ப சிகிச்சையோடு நம் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்து இந்தப் பாதிப்பிலிருந்து நிச்ச யம் மீளலாம்.
முதலில் உடல் எடையைச் சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.
வைட்டமின் டி அதிகம் கிடைக்கக்கூடிய சூரிய ஒளியை உடலில் நேரடியாக படும்படி இருப்பது அவசியம்.
கிழங்குவகைகளைத் தவிர்த்து பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலானவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் அதிகமுள்ள பால் சார்ந்த உணவு வகைகள், முருங்கைக் கீரை வாரம் 4 நாட்களாவது எடுத்துக் கொள்ளுங்கள்.
இயன்றவரை நடைபயிற்சி, நாற்காலியில் அமராமல் கீழே பாய்விரித்து சம்மணமிட்டு அமர்வது நல்லது.
தீவிர மூட்டுவலி இல்லாத பட்சத்தில் வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இந்திய கழிவறைகளைப் பயன்படுத்துவது நல்லது.
மூட்டுவலி தீவிரமாக இருக்கும்போது ஓய்வு எடுத்துக்கொள்வதோடு அவை குறையும் நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
மன அழுத்தத்தாலும் மூட்டுவலி தீவிரமாகும் என்பதால் மனதை அமைதிப் படுத்த எளிய யோகாசனங்கள் மேற்கொள்ளலாம்.
கால்மூட்டுகளில் வலி இருப்பவர்கள் உறங்கும்போது ஒருக்களித்து படுத்து வலி இருக்கும் கால்களுக்கு தலையணை வைத்துக்கொள்ளலாம்.
பிரண்டையில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் மூட்டு வலியை அண்டவிடாமல் செய்துவிடும். பிரண்டைத் துவையல், பிரண்டைப் பொடி என்று உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வலி ஏற்படும்போது பிரண்டையுடன் கல்உப்பு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, இரும்பு வாணலியில் லேசாக வதக்கி சூடு தாங்கும் அளவில் வலி இருக்கும் இடத்தில் வைத்து கட்டுவார்கள்.
முடக்காமல் இருக்கச் செய்யும் முடக்கத்தான் கீரை என்று சொன்ன முன்னோர்கள், இந்தக் கீரையை தோசையாக, குழம்பாக, பொடியாக, துவையலாக வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இப்போது போல் யோகா, உடற்பயிற்சி எல்லாம் அப்போது கிடையாது. ஆனாலும் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்து உடல் உழைப்பில் குறையில்லாமல் இருந்தார்கள். குறிப்பாக எங்கு போனாலும் நடராஜா சர்வீஸ்தான். அதாவது நடந்தேதான் செல்வார்கள்.
கொஞ்சம் நடப்போம். மூட்டுக்கு வலு சேர்க்கும் உணவுகளைச் சேர்ப்போம். வலியை வரவிடாமல் செய்வோம்!
அடுத்த பதிவில் வேறொரு சித்த மருத்துவ சிகிச்சையை பற்றி பார்ப்போம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
நன்றி





No comments:
Post a Comment