About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Saturday, October 2, 2021

மகாத்மாவும், மகாஆத்மாவும்...

இன்று அக்டோபர் 2
அண்ணல் மகாத்மாவின் ஜெயந்தி நாள்
அவரின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம்....

ஏழ்மையை போக்கும் எளிமை
***********************************
தேவைகளுக்கேற்ப ஆசைகள் அமைய வேண்டும்.  ஆசைகளுக்கேற்ப தேவைகளை அதிகரிக்கலாகாது.  இன்று நம் மீது படையெடுத்திருக்கும் மேலை நாடுகளின் வணிகக் கலாச்சாரம் எளிமையில் நிறைவு காணும் நம் பாரம்பரியப் பண்பாட்டின் ஆணிவேரையே அறுத்துவிட்டது.  நுகர்வு மனித மனங்களில் இன்று வெறியாக வளர்ந்துவிட்டது.  சுகபோகங்களில் மிதக்க விரும்பும் மனம் எந்தப் பாவத்தையும் செய்யவும் தயங்காது.  தனி மனித வாழ்க்கை முறையும், பொது வாழ்க்கை நெறிகளும் பாழ்பட்டுப் போனதற்கு வரைமுறையற்ற நுகர்வு வெறியே அடிப்படைக் காரணமாகும்.  ஏழ்மை என்பது எதுவும் இல்லாதிருப்பது.  எளிமை என்பது தேவைகளையும், ஆசைகளையும் அளவோடு அனுபவிப்பது.  காந்தியம் ஏழ்மையைப் போக்கி எளிமையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்வது.  ஆடம்பர ஆரவாரங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து எளிய வாழ்வின் பெருமையை நிலைநிறுத்த இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்ட வேண்டும்.

வாழ்க்கையின் கம்பீரம்
****************************

இலவசமாக எவரிடத்தும் எதையும் பெறாமல், சுயமாக உழைத்துத் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில்தான் வாழ்க்கையின் கம்பீரம் கூடும்.  அரசிடம் யாசகம் கேட்க வேண்டிய அவசியமில்லை.  வேலை வாய்ப்பைப் பெருகச் செய்வதுதான் அரசின் நோக்கமாக அமைய வேண்டும்.  வேலையின்மை வறுமையை வளர்க்கும்.  வறுமை வன்முறைக்கு வழிக் கதவைத் திறக்கும்.  வன்முறை சட்டம் – ஒழுங்கைச் சிதைக்கும்.  சமூகம் அமைதியையும் வளர்ச்சியையும் இழக்கும்.  காந்தியப் பாதையில் சிறு தொழில் – குடிசைத் தொழில் பல்கிப் பெருகினால் வேலையின்மை மறையும். நுகர்வுப் பொருள்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய அரசு வசதிகள் செய்து கொடுப்பதால் சிலருக்கு வேலைகிடைக்கும்.  சிலரது வீட்டில் வளம் பெருகும்.  பெருமுதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிப்பதைவிட, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் சிறு தொழில்களில் குறைந்த முதலீட்டில் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் பாதையில் அரசின் தொழில் கொள்கை அமைவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுவோம்.

நாம் தான் மாற்றத்தின் தொடக்கம்
*****************************************
நாம் விரும்புகிறாற்போல் சரியானது இல்லையென்றால், சரியான வேறொன்றை நாம்தான் உருவாக்க வேண்டும். தீயதைப் புறக்கணிக்கும் துணிவு இருந்தால், நல்லதை நாம் நிச்சயம் அடைந்தே தீர்வோம். இந்த மேலான நம்பிக்கையும், உண்மை சார்ந்த உறுதியும்தான் காந்தியம் கண்விழித்ததற்கான காரணங்கள். ‘உலகம் மாறும் வரை நான் காத்திருக்கமாட்டேன். என் முதலடியே போதும். அதுவே மாற்றத்தின் தொடக்கம்’ என்றார் அண்ணல். ‘தொடங்கு, உடனே தொடங்கு, உன்னில் தொடங்கு’ என்பதே நமது வேதகீதம் ஆகட்டும்....
தேசபிதாவின் பொன்மொழி
*********************************
முதலில் அவர்கள் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள், அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய்.

No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...